இன்றைய வார்த்தை:
20.02.2024 / செவ்வாய் 
வசனம்:
நியாயாதிபதிகள் 6:12,14
"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்."
 
செய்தி:
            கர்த்தர் என்றும் நம்மோடு இருக்கிறார். கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்ட மனிதனை எப்படியாகிலும் பயன்படுத்துவார். அவனுக்கு ஞானம், அறிவு, பெலம், செல்வம் ஆகியவை தேவையில்லை. பெலனற்றவனாக இருந்தாலும் கர்த்தர் அவனுக்கு பெலன் தந்து நடத்துவார். கர்த்தர் அவனோடு இருந்து காரியத்தை வெற்றியாய் முடிய பண்ணுவார். கிதியோன் பயந்து கொண்டிருந்த போது கர்த்தர் அவனோடு பேசி: பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன். உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா. உன்னை கொண்டு இரட்சிப்பை உணடாக்குவேன்‌ என்று சொன்னார். அவனுடைய பயத்தை கண்டு கர்த்தர் அவனை விலக்கவில்லை. கர்த்தர் அவனை தெரிந்து கொண்டு அவனோடிருந்து பெரிய காரியங்களை செய்தார். அதேபோல் நாமும் பயந்து பெலமற்று இருந்தாலும் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். அப்போது அவர் நம்மோடு இருப்பார். அவர் நம்மோடு இருக்கும் போது நம் பெலவீனங்களை மாற்றி பெலனை தருவார். நம் பயத்தை மாற்றி தைரியத்தை கொடுப்பார். நம் துக்கத்தை மாற்றி சந்தோஷத்தை கொடுப்பார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரையே தங்கள் பெலனாக கொண்டிருக்க  ஜெபிப்போம்.