இன்றைய வார்த்தை:
31.01.2024 / புதன் 
வசனம்:
ஏசாயா‬ ‭55:7‬
"‭துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்."
 
செய்தி:
            கர்த்தர் நம் தேவன். அவர் ஒருவரே நம்மை மன்னிக்க தக்க தேவன். அவரையன்றி வேறு யாராலும் நம் பாவங்களை மன்னித்து நமக்கு விடுதலையை கொடுக்க முடியாது. துன்மார்க்கன் தன் பாவ வழியை விட்டு மனந்திரும்பி பரிசுத்த வழியில் நடக்க தன்னை ஒப்புக்கொடுக்கும் போது கர்த்தர் அவன்மேல் கடின இருதயமுள்ளவராக இருப்பதில்லை. கர்த்தர் அவன்மேல் மனதுருகி அவனை மன்னித்து தம் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுகிறார். அவன் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருந்தாலும் அவருடைய இரத்தம் அதனை கழுவி சுத்திகரிக்க வல்லது. அவர் தனக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்று விசுவாசிக்கும் மாத்திரத்தில் அவனுடைய பாவம் மன்னிக்கப்படுகிறது. ஏனென்றால் கர்த்தர் மிகவும் இரக்கமுள்ளவர். எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். அக்கிரமகாரன் தன்னுடைய தீய எண்ணங்களை மாற்றி அவற்றை விட்டு விலகி பரிசுத்த சிந்தையோடு கர்த்தரிடத்தில் திரும்பும்போது அவர் சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக் கொள்கிறார். ஒரு பாவி மனந்திரும்பும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. அவர் மன்னிப்பதில் தயை பெருத்தவராக இருக்கிறார்.
 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரிடம் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து மன்னிக்கப்பட ஜெபிப்போம்.